×

குஜராத் தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த விவகாரம்; பெங்களூரு சிறையில் இருந்த அரி நாடார் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்: 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸ் முடிவு

சென்னை: குஜராத் தொழிலதிபரிடம் வங்கியில் ரூ.100 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.1.50 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், பெங்களூரு சிறையில் இருந்த அரி நாடாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ைகது செய்தனர். அதைதொடர்ந்து அவரை இன்று சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மோசடி தொடர்பாக 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏற்றுமதி தொழில் செய்து வரும் தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத்(51). இவர், குஜராத் மற்றும் கத்தாரில் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக ஏற்றுமதி தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது பெங்களூரை சேர்ந்த முகம்மது அலி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அருள்ராஜ் ஆகியோர் மூலம் அரி நாடார் பழக்கமானார்.

அப்போது, 6 விழுக்காடு வட்டிக்கு லோன் வாங்கி தருவதாக அரி நாடார் உறுதி அளித்தார். அதன்படி எனக்கு ரூ.100 கோடி பணத்தை வங்கியில் லோன் வாங்கி தருவதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.2 கோடியும், மேலும் தனக்கு தனியாக ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி கடந்த 2021 பிப்ரவரி 2ம் தேதி தனியார் வங்கி ரூ.100 கோடி கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தது போல் எனது பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பியுள்ளார். அடுத்த நாள் சென்னை தி.நகரில் உள்ள அரி நாடார் அலுவலகத்தில் நேரடியாக ரூ.25 லட்சம் கமிஷன் கொடுத்துள்ளார். அதன் பிறகு ரூ.100 கோடிக்கு கமிஷனாக அவர் கூறியபடி இரண்டு தவணையாக ரூ.1.25 கோடி பணம் கொடுத்துள்ளார். அதன்பிறகு அவர் சொன்னப்படி ரூ.100 கோடி கடன் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குஜராத் தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத்(51). சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் அரி நாடார் குஜராத் தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அரி நாடார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பெங்களூரு தொழிலதிபரிடம் ரூ.20 கோடி மோசடி செய்ததாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரி நாடாரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அரிநாடாரை அப்போது கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ரூ.1.50 கோடி மோடி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரசித் தீபா பெங்களூரு சிறையில் கடந்த 22 மாதங்களாக உள்ள அரி நாடாரை அதிரடியாக கடந்த 27ம் தேதி கைது செய்தார். அதைதொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இன்று அரி நாடாரை பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு இன்று பிற்பகல் எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலும், ரூ.1.50 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அரி நாடாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.



Tags : Gujarat ,Ari Nadar ,Bengaluru ,Chennai , 1.50 crore fraud case against Gujarat businessman; Ari Nadar, who was in Bengaluru jail, was brought to Chennai: Police decided to remand him for 3 days and conduct an investigation
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...